கலசப்பாக்கம் முன்னாள் திமுக எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் மறைவு
கலசப்பாக்கம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் , திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளரும் மூத்த திமுக முன்னோடியுமான பெ.சு. திருவேங்கடம் காலமானார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பெரிய கிளாம்பாடி கிராமத்தில் வசித்து வந்த கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. திருவேங்கடம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். வயது 89. அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த திருவேங்கடம் ஏற்கனவே திமுகவில் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தார்.
தனது மாணவப் பருவத்தில் இருந்தே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி திமுக செயல் வீரராக பணியாற்றியவர்.
பெரிய கிளாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராகவும், துரிஞ்சாபுரம் ஒன்றிய பெருந்தலைவராகவும், 4 முறை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றினார்.
தற்போது திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக செயலாற்றி வந்தார். இவரது மகன் பெ.சு.தி.சரவணன், தற்போது கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இவரது சொந்த ஊரான பெரிய கிளாம்பாடி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ .வேலு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, ஜோதி, அம்பேத்குமார், எஸ் கே பி பொறியியல் கல்லூரி தலைவர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகளும், அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.