சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவான ஜவ்வாதுமலையில் விளையும் தரமான சாமை

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தரமான சாமை திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

Update: 2024-01-28 10:52 GMT

ஜவ்வாது மலையில் பயிரிடப்பட்டுள்ள சாமை

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தரமான சாமை ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

உணவே மருந்து என்ற முன்னோர்களின் ஆலோசனையை ஏற்காமல் போனதின் விளைவாக இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை எல்லாமே மேலை நாட்டின் நாகரீகத்தை பின்பற்றியே வந்து கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் நமது குடும்பங்களில் பழைய சாதம், சிறு தானிய உணவுகள், கேழ்வரகு கூழ், கீரை வகைகள் என எல்லாமே இயற்கையாக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை கொண்டதாக இருந்தது.

தற்போது அனைத்து தர மக்களும் நாகரீக உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் தென்னிந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக தமிழகம் விளங்கி வருகிறது.

அதுமட்டுமா? ரத்த அழுத்தம், மலசிக்கல், மூட்டுவலி, உடல்பருமன் என வலிநிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிகிச்சை பெற டாக்டர்களை அணுகும் போது மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை அதிகளவு சாப்பிட பரிந்துரை செய்கின்றனர்.

சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை பெரிய அளவில் குறைக்க வேண்டும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சர்க்கரை நோயின் வரலாறு இருந்தால், அவர்களின் சந்ததியை முதலில் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில உணவுகள் மெனுவில் உள்ளன.

வெள்ளை அரிசி, சிவப்பு மற்றும் பழுப்பு அரிசியிலிருந்து மாறுவது நல்லது. குயினோவா சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் குதிரைவாலி, வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

எனவே சிறுதானியத்தின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. சிறுதானிய உணவுகளுக்கு இன்று மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் சாதாரண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்கெட்டுகள், மால்கள் என எல்லா இடத்திலும் சிறுதானிய உணவுகளுக்கு என தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் சக்கைபோடு போடுகிறது.

அப்படி சிறப்பு வாய்ந்த சிறுதானிய உணவுகளை உற்பத்தி செய்வதில் தமிழகத்திலேயே ஜவ்வாதுமலை முன்னிலை வகித்து வருகிறது என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கு சாமை பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 9 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே ஜவ்வாதுமலையில் மட்டும் தான் சாமை உற்பத்தி முன்னிலை வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் சாமை அரவை செய்யப்படாமல் நேரிடையாக குஜராத், பீகார், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு வெளியூர் வியாபாரிகளால் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

மேலும், விவசாயத்தில் பூச்சி மருந்து பயன்பாடு ஜவ்வாதுமலையில் அறவே இல்லாத காரணத்தினால் இந்தியாவிலேயே ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சாமை உடலுக்கு கேடுவிளைவிக்காத தரமானதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்திய அளவில் ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சாமைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் ஆகிய சிறுதானிய பயிர்களும் தலா 250 ஹெக்டர் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாங்கள் உற்பத்தி செய்த சாமையை வீட்டில் கைகுத்தல் அரிசியாக மாற்றி சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருந்தது.

ஆனால் ஜவ்வாதுமலையில் சாமை அரிசியை அரவை செய்வதற்கான மில்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள் இதனை ஒரு வர்த்தக பயிராக கருதி கிலோ ரூ.32 க்கு அரவை செய்யாத சாமையை விற்பனை செய்து விடுகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் நெல் அரிசியை வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர். ஆனால் இதே ஜவ்வாதுமலையில் வெளியூரில் அரவை செய்து மீண்டும் கொண்டுவரப்பட்டு ஒரு கிலோ சாமை அரிசி ரூ.100 விற்பனை செய்யப்படுகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

ஜவ்வாது மலையில் உள்ள மக்களுக்கு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர்களுக்கு அரிசி அரவை செய்வதற்கு தொழில் நுட்ப வசதிகள் மற்றும் அரவை இயந்திரங்களை மானிய விலையில் தந்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News