கலசப்பாக்கம் பகுதியில் வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணி துவக்கம்
கலசப்பாக்கம் பகுதியில் வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.;
வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 20.81 லட்சம் வாக்காளர்ககளுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளா்களுக்கு தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் பெயர், போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்குச்சாவடி விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 20.81 லட்சம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் சீட்டுகள் (பூத் சிலிப்), வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மூலம் வீடு வீடாக நேரில் சென்று வழங்கும் பணி தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் வாக்காளர் விவர சீட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்து வாக்காளர் மையங்களை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு, கீழ் பாலூர் ஆகிய ஊராட்சிகளில் வாக்காளர் விவர சீட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வாக்காளர் மையங்களை ஆய்வு செய்து பேசிய ஆட்சியர், வாக்காளர்கள் நீங்கள் உங்கள் வாக்குகளை சரியாக பதிவு செய்து ஜனநாயகத்தின் உரிமையை நாம் மீட்க வேண்டும். வாக்குரிமை நமது உரிமை எப்பொழுதும் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது அதனால் கட்டாயம் அனைவரும் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்குகளை சரியாக பதிவு செய்து உங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என பேசினார்.
பின்னர் வாக்களிக்கும் மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர் காப்பலூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மத்திய உணவு சுத்தமாக வழங்க வேண்டும் சத்தாகவும் இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கும் சத்துணவு அமைப்பாளர்களுக்கும் அறிவுரை கூறி வாக்களிக்கும் விவர சீட்டினை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் எங்கே என கேள்வி எழுப்பிய கலெக்டர்
கலசப்பாக்கம் பகுதியில் வாக்கு சாவடி மையங்களை ஆட்சியர் ஆய்வு செய்த போது சில இடங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கு கூறுவதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரியை அழைத்தார். அப்போது அவர் அங்கு இல்லாததால் ஆட்சியர் ஆவேசமாகி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏன் வரவில்லை என கேள்விகளை எழுப்பினார். மேலும் கலசப்பாக்கம் பகுதியில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தது. அந்தப் பகுதியில் இயற்கைச் சூழல் மிகவும் கம்மியாக இருந்தது. ஒரு மரங்கள் கூட சரியான முறையில் இல்லை.
இதனைப் பார்த்த கலெக்டர் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும். மரம் வளர்த்தால் தான் மழை பெற முடியும் மழை பெய்தால் தான் நமது கிராமங்கள் வளர்ச்சி அடையும், அதனால் கட்டாயம் மரம் வளருங்கள் என அங்கிருந்த பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்க அலுவலர் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.