ஜவ்வாது மலை அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரூ.50 லட்சம் நிதியுதவி

ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரவி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Update: 2023-10-12 00:43 GMT

தமிழக கவர்னர் ரவி

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட தமிழக கவர்னர் ரவி ரூபாய் 50 லட்சம் நிதி உதவியை வழங்கியுள்ளார்.

தமிழக கவர்னர் ரவி கடந்த ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் . அப்போது ஜவ்வாது மலைக்கு சென்று எஸ் எஃப் ஆர் டி (சொசைட்டி ஃபார் ரூரல் டெவலப்மெண்ட்) என்ற நிறுவனம் நடத்தி வரும் ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவ மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

அப்போது அந்தப் பள்ளி தொடர்ந்து 26 ஆண்டுகளாக அரசு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருவதை பாராட்டி அப்பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு பாராட்டி சான்று வழங்கினார். அப்போது பள்ளி கூடுதல் கட்டிடம் தேவைப்படுவது குறித்து ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் அந்த பள்ளிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவியாக கவர்னர் ரவி அளித்திருக்கிறார்.

இதற்கு அந்தப் பள்ளியின் செயலாளர் அர்ஜுனன் கவர்னருக்கு அனுப்பி உள்ள நன்றி கடிதத்தில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஜவ்வாது மலைக்கு வந்த முதல் ஆளுநர் நீங்கள்தான், பழங்குடியினருக்கு சரியான நேரத்தில் உதவி செய்து இருக்கிறீர்கள், இந்த உதவியை மறக்க முடியாது . இதன் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாங்கள் தந்த நிதி முறையாக பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன் எனவும் அந்த கடிதத்தில் செயலாளர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செயலாளர் அர்ஜுனன் கூறுகையில் எங்களது பள்ளியில் தற்போது 1720 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் .

பழங்குடி சமூக மக்களிடையே வெறும் 0.2 சதவீதமாக இருந்த கல்வியறிவு அளவை தற்போது 39 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம் . இது எங்களது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. எங்களின் முயற்சிகள் மக்களிடையே கல்வியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் முன்னால் மாணவர்கள் பலர் அறிவியல் கலை மற்றும் பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் எங்கள் பகுதியிலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பள்ளியின் வளர்ச்சிக்கு கவர்னர் நிதி அளித்திருக்கிறார். அவருக்கு நன்றி கடிதம் அனுப்பி இருக்கிறோம் . மேலும் அந்த பணத்திலிருந்து நான்கு தரமான வகுப்பறைகள், பிளஸ் ஒன் வகுப்புகள் கட்டப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சேதமடைந்த பள்ளியை சீர் திருத்துவதற்காக நிதியுதவி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News