போலி டாக்டர் கைது

ஜமுனாமரத்தூரில் மருத்துவம் பார்த்துவந்த பெண் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-24 07:02 GMT

கைதான போலி டாக்டர் கிருஷ்ணவேணி.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் போளூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், ஜமுனாமரத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 40) என்பதும், அவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு டிப்ளமோ சித்தா முடித்தவர் என்பதும் வீட்டிலேயே கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

மேலும் அங்கு மருந்து, மாத்திரை, ஊசி போன்றவை இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கிருஷ்ணவேணியை ஜமுனாமரத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News