மாணவர்களின் கல்விதான் நாளைய எதிர்காலம் : துணை சபாநாயகர் அறிவுரை..!

மாணவர்களின் கல்விதான் நாளைய எதிர்காலம் என்று மாணவர்களுக்கு துணை சபாநாயகர் அறிவுரை வழங்கினார்

Update: 2024-02-08 02:43 GMT

முப்பெரும் விழாவில் பேசிய துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சொரக்குளத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நுழைவு வாயில் திறப்பு விழா, வைர விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி. ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி நுழைவு வாயில் திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியதாவது;

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவர்கள் நீங்கள் நல்ல முறையில் படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும். நீங்கள் படிப்பில் பெரிய அளவில் சாதித்து ஒரு மாவட்ட ஆட்சியராகவோ, நீதிபதியாகவோ, காவல் கண்காணிப்பாளராகவும், கல்வி அலுவலராகவும் மற்ற துறை அதிகாரிகளாகவோ நீங்கள் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும். அப்படி சாதித்தால் தான் நீங்கள் முழுமையாக வெற்றி அடைந்ததாக கருதப்படும்.

தற்போது  தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு இல்லம் தேடி கல்வி ,கற்றல் கற்பித்தல் ,பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம் என ஏராளமான பல திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறார்கள்.

இந்த திட்டங்களை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்தி சாதிக்க வேண்டும். நீங்கள் சாதித்து நம் நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கும் நம் மாவட்டத்திற்கும் நம் பள்ளிக்குள் நமது பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

மேலும் இந்தப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் எந்த நேரத்திலும் கேளுங்கள், நாங்கள் உங்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளோம். மாணவர்கள் ஆகிய உங்களுக்கு கல்விதான் சிறந்த எதிர்காலம்.

அதனால் நல்ல முறையில் படித்து சாதியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News