நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி
திருவண்ணாமலை அருகே நரிக்குறவர் இன மக்களுக்க சாதி சான்றிதழ்களை சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.;
பழங்குடியினா் சாதி சான்றிதழ் பெற்றுள்ள நரிக்குறவா் சமுதாய மக்கள் தங்களது பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க வைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலையை அடுத்த கொண்டம், காரியந்தல் கிராமங்களில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு பழங்குடியினா் (எஸ்.டி.) சாதி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி தலைமை வகித்தாா்.
அப்போது வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:-
திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 575 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது. காரியந்தல் பகுதிகளில் ஏற்கனவே 110 நபர்களுக்கு எஸ் டி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பதிவு செய்துள்ள எழுபது நபர்களுக்கு எஸ் டி சாதி சான்றிதழ் வழங்க உள்ளோம்.
மேலும் சாதி சான்றிதழ் பெறாதவர்கள் இ சேவை மையத்தில் பதிவு செய்து பழங்குடியினர் சாதி சான்று பெறலாம். இந்த சாதி சான்றை பயன்படுத்தி நரிக்குறவர் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில்
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் எண்ணற்ற நல திட்ட உதவிகளை தமிழகத்தில் செய்துள்ளார் என்பதற்கு ஒரு சான்றாக தான் இந்த நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் ஏராளமான சலுகைகள் அவா்களுக்கு வழங்கப்படுகிறது.
நமது மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு , மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உள்ளிட்டோர் இணைந்து இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் தற்போது வழங்கப்படுவது அவர்களுக்கு ஒரு பொக்கிஷம் போன்றதாகும். இதனை பயன்படுத்தி நரிக்குறவர் இன மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் தங்களது குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த சாதி சான்றிதழ் மூலம் எண்ணற்ற நல திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன் உதவிகளை நீங்கள் பெறலாம். இந்த நலத்திட்ட உதவிகளை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்தி மருத்துவம் முதல் பல்வேறு உயர்கல்வியை தங்களது குழந்தைகளை படிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.