ஆபத்தான நிலையில் மின் கம்பங்களை மாற்ற மக்கள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழுதான மின் கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-27 02:42 GMT

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ,கலசப்பாக்கம் பகுதிகளில் மின் கம்பங்கள் பழுதான நிலையில் எப்போ விழுமோ , இப்ப விழுமா என்ற அவல நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணியில் மின்கம்பம் பழுதான நிலையில் உள்ளது. கம்பம் மாற்றக் கோரி மின்சார துறை அதிகாரிகளிடமும், பஞ்சாயத்து தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மின்கம்ப ஒயர்கள் கீழே தொங்கும் நிலையில் தற்போது உள்ளது.

அதுமட்டுமின்றி பக்கத்தில் உள்ள மரங்கள் மீதும் கிளைகள் மீதும் மின்சார ஒயர்கள் தொங்கும் நிலையில் உள்ளதால் மழை நேரத்தில் எந்த நேரத்தில் அருந்து விழுமோ என்று அப்பகுதி மக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்.

அதனால் மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் மாற்றி மின் கம்ப ஒயர்களை உயரமாகவும் பக்கத்தில் உள்ள மரக் கிளைகளை கழித்து விடவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செங்கம்

இதே போல திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள குயிலம் கனி காரன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் ஏழு கம்பங்கள் அடி முதல் நுனி வரை பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும் என்ற அபாயத்தில் உள்ளது.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பலத்த சூறைக்காற்றுடன் சில தினங்களாக பெய்து வருகிறது. அதிலும் செங்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த சூறைக்காற்றில் வாழைமரம், பெரிய புளியமரம், விவசாய நிலத்தில் இருந்த பல்வேறு மரங்கள், நெருப்பயிறுகள் அடியோடு சாய்ந்தன.

இந்நிலையில் பழுதடைந்த மின் கம்பங்கள் சாயாமல் மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது.அப்பகுதியை கடந்து செல்லும் கிராம மக்கள், விவசாயிகள் ,பழுதடைந்த மின் கம்பங்களை கடந்து செல்லும்போது அச்சத்துடனும் பயத்துடனும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் தற்போது பெய்த கோடை மழையின் காரணமாக கம்பங்கள் இருக்கும் இடத்தில் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் பழுதடைந்த மின் கம்பங்களால் மின் சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது.

அந்த நீரில் கால்நடைகள் ஏதாவது நீர் அருந்த சென்றாலும் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது . இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாக தான் பள்ளிகளுக்கு அதிகம் செல்வர்.

இதுகுறித்து செங்கம் மின்சாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை மாற்றவில்லை.

எனவே செங்கம் மின்சார துறை அதிகாரிகள் மின் கம்பங்களை பார்வையிட்டு விபத்து நேரிடுவதற்கு முன் மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News