கலசப்பாக்கத்தில் மழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கலசபாக்கம் பகுதியில் கன மழை பெய்தது. பலத்த மழையால் கலசபாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. கலசபாக்கம் வழியாக ஓடும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. காலை 8 மணி வரை 101 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது. இதனால் கலசப்பாக்கம் பகுதி வெள்ளக்காடாக மாறியது. இதில் கலசப்பாக்கம், பில்லூர், கப்பலூர், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பழமொழியில், லாடவரம், பூண்டி, நார்த்தாம்பூண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 900 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.
கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. ஒருபக்கம் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது மிக வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.