மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்: ஆட்சியர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.;
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மக்களை காக்க வைக்காமல் அலைக்கழிக்காமல் பதிவு செய்ய வேண்டும் ஆய்வின் போது ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் தொம்பரெட்டி உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி பொது வினியோக கடையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 991 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்து 964 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
அதில் 4 ஆயிரத்து 257 விண்ணப்ப பதிவு தற்போது வரை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டை பதிவு செய்யும் பணியை விரைந்து முடித்திடவும் முகாமினை ஆய்வு செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்ப பதிவு செய்யும்பொழுது குடும்பத் தலைவியின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, செல்போன் எண், சொத்து விவரங்கள், மின் இணைப்பு விவரம் போன்றவற்றின் நகல்கள் குறித்த விவரங்களை முகாம் நடைபெறும் மையத்தில் தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அலுவலர்கள் ஒப்புதல் சீட்டு வழங்குவார்கள்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாமில் வருவாய் துறையினர் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இணைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஜவ்வாது மலையில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துகிறார்களா என்று ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு செய்து அங்குள்ள மையப் பொறுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளரும் மக்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை சரியான முறையில் எடுத்து கூறுகிறார்களா, அப்படி கூறப்படவில்லை என்றால் அவர்களுக்கு முதலில் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை அதன் விவரம் அந்தத் திட்டத்தைப் பற்றிய தெளிவான முறையில் எடுத்துக் கூறி மக்களுக்கு புரிய வையுங்கள்.
உண்மையான பயனாளிகள் யாரும் விட்டுப் போக கூடாது அதனால் சரியாக பதிவு செய்யுங்கள். மேலும் பதிவு செய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக இத்திட்டத்தின் பொறுப்பாளரிடம் கேட்டு அறிந்து பதிவு செய்ய வேண்டும். அதேபோல் மக்களை அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல், நீண்ட நேரம் காக்க வைக்காமல் மக்களுக்கு பதிவு செய்து கொடுங்கள் என்று ஆய்வின்போது கூறினார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள தொழில் நுட்ப மையத்தில் நடைபெற்ற மாணவர் சேர்கை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஜவ்வாதுமலை வட்டாரத்தில் உயர்கல்வி தொடராத மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆலோசனை வழங்கி மற்றும் சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினார்.
ஆய்வின் போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், ஜவ்வாதுமலை ஒன்றிய குழுத்தலைவர் ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், வட்டாட்சியர் மனோகரன், தனி வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.