சிறுவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

சிறுவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த வாத்து பண்ணை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-01-21 06:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தை சேர்ந்த 17 மற்றும் 10 வயதுடைய 2 சிறுவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள வாத்து பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

வாத்து பண்ணையின் உரிமையாளர்கள், சிறுவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலை பேருந்து  நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து வாத்து பண்ணையை சேர்ந்த சிலர் தேடி வந்து பேருந்து  நிலையத்தில் வைத்து மீண்டும் அவர்களை அடித்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் அவர்களிடமிருந்து சிறுவர்களை மீட்டு திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள அரசு வரவேற்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சித்ராபிரியா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முன் பணம் கொடுத்து, அவர்களை கொத்தடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வாத்து பண்ணையின் உரிமையாளர்கள் காவேரிபட்டினத்தை சேர்ந்த முருகேசன், சிவா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News