பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் கஞ்சா

கலசப்பாக்கம் அடுத்த பிரசித்தி பெற்ற பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.;

Update: 2022-08-07 14:08 GMT

கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மகா தேவமங்கலம், கடலாடி ஆகிய ஊராட்சிகளுக்கு இடையில் பருவதமலை அமைந்துள்ளது. மூலிகை செடி கொடி மரங்கள் நிறைந்த இம்மலை மீது பக்தர்கள் ஏறி சென்று உச்சியில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வர் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதம் பவுர்ணமி, அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து சுமார் 4ஆயிரத்து 560 அடி உயரம் உள்ள மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாலிபர்கள் கஞ்சாவை எடுத்துக்கொண்டு மலை மீது சென்று பயன்படுத்துவதாகவும் மற்றும் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு, வனத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதன் அடிப்படையில் வனத்துறையினரும் கடலாடி காவல்துறையினரும் மலை மீது ஏறி செல்லும் பக்தர்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 5 வாலிபர்கள் பருவதமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை கடலாடி காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். அதில் ஒரு வாலிபர் கஞ்சாவை பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News