திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை
தேர்தலின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது;
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது . இதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சமத்துவபுரம் அருகே சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை அலுவலர் வசந்தகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. உடனே அவற்றை மடக்கி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தில் இருந்த பெட்டி பெட்டியான புது துணிகளால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காரை முழுவதுமாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் அவற்றினுள் இருந்த சுமார் 20,000 மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்தனர்.
அந்தக் காரில் பயணம் செய்த வியாபாரிகள் நாங்கள் புது துணியை துணி கடைகளுக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள், நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் சோதனைக்கு பின் குஜராத் வாலிபர்கள் , புது துணிகளை கொண்டு செல்லும் ஆவணங்களை குஜராத்தில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பில்களை காண்பித்த பிறகு அவற்றை சோதனை செய்த அதிகாரிகள் அந்த வியாபாரிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதேபோல் கலசப்பாக்கம் பகுதியில் வரும் வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் துணைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்ற பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் சுவர் விளம்பரம், கட்சி பேனர்கள் மற்றும் கட்சி புகைப்படம் வைக்கப்பட்டுள்ள பொது இடங்கள் பேருந்து நிலையங்கள் என பல்வேறு இடங்களில் இந்த விளம்பரங்களை அகற்றும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இன்றைக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.