ஏரி புனரமைக்கும் பணி கூடுதல் ஆட்சியர் ஆய்வு

தேவனந்தல் ஏரி ரூபாய் 2.50 கோடியில் புனரமைக்கும் பணி கூடுதல் ஆட்சியர் ஆய்வு

Update: 2023-03-21 04:46 GMT

 திட்ட பணிகளை ஆய்வு செய்த  கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேவனந்தல் ஏரியில் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மூலம் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் இரண்டரை கோடியில் புனரமைப்பு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏரி கரையை பலப்படுத்துதல் ,  வனம் மேம்பாடு ,  ஏரியின் நடுவில் சிறு தீவு அமைத்தல், பசுமை வளர்ச்சி ,    பறவைகள் தங்குவதற்கான சூழல் அமைத்தல்,  ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டுவதற்கான பாதை அமைத்தல்  , உட்பட பல்வேறு பணிகள் திட்டத்தின் கீழ் துவக்கப்பட உள்ளது.

இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங் நேரில் பார்வையிட்டு திட்ட பணிகளை ஆய்வு செய்தார் . எந்த இடங்களில் என்னென்ன திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் குப்பை கிடங்கையும் சென்று பார்வையிட்டார்.

இந்த ஏரியை புனரமைப்பதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் நிரந்தர பாசன வசதி பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.  மேலும் விவசாயிகள் மழையை மட்டும் நம்பி இல்லாமல் இந்த ஏரி தண்ணீரை நம்பி பயிர் வைப்பதற்கும் வழிவகை ஏற்படும்.

இத்திட்டம் நிறைவடைந்த பிறகு இரண்டு வருடங்களுக்கான பராமரிப்பு நிதியையும் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனமே தொடங்க உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், ஆனந்த் , தேவனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ,ஊராட்சி செயலாளர் செல்வமணி  மற்றும் பலர் உடன் இருந்தனர்.  

Tags:    

Similar News