திருவண்ணாமலை பகுதியில் காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்

திருவண்ணாமலை அருகே காரில் வந்து நகைகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-24 12:24 GMT

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளான நல்லவன்பாளையம், கருங்காலிகுப்பம், காஞ்சி, பெரியகிளாம்பாடி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் தனிமையில் வசிக்கும் பெண்களை குறி வைத்து அவர்களின் குடும்ப விஷயங்களைத் தெரிந்து கொண்டு மர்ம பெண் காரில் வந்து உறவினர்கள் போல் பேசி நகைகளை திருடி செல்கிறார்.

அப்போது அந்த பெண் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி நகை மற்றும் பணம் திருடி கொண்டு காரில் தப்பி செல்கிறார்.

திருவண்ணாமலை மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் அந்தப் பெண் பல இடங்களில் தனது கைவரிசையை காட்டி வருகிறார். இது சம்பந்தமாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து அந்த மர்ம பெண் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் இதுவரை மர்மபெண் போலீசாரிடம் சிக்கவில்லை.

இந்நிலையில் திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே வேடந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட அரியாங்குப்பம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் லலிதா என்ற   82 வயது மூதாட்டி தனிமையில் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். கார் டிரைவராக உள்ள இவரது மகன் ஜெயபிரகாஷ் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் லலிதாவின் வீட்டின் முன்பு திடீரென ஒரு கார் வந்து நின்றது. இதில் இருந்து ஒரு பெண் இறங்கி இரும்புகேட்டை திறந்து கொண்டு உள்ளே வேகமாக வந்தார். இதை பார்த்த லலிதா யார் ? எதற்காக வருகிறாய்? என்று கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாமல் அந்த பெண் உள்ளே வந்து குடும்பத்தினரின் பெயரை சொல்லி அவர் தான் அனுப்பி வைத்துள்ளார். தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்காக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கு லலிதா மறுத்து நான் தற்போது தான் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகளை செய்துள்ளேன், அதனால் எந்த பூஜையும் வேண்டாம் எனக் கூறியுள்ளார் அதற்கு அந்தப் பெண் மிரட்டும் தொனியில் பூஜை செய்தாக வேண்டும் என்று மிரட்டி உள்ளார் .அதனால் பயந்து போன லலிதா ஒப்புக்கொண்டு உள்ளார்.

அதன் பிறகு லலிதா கழுத்தில் அணிந்திருந்த நகையை கழட்டி அங்குள்ள சாமி படம் முன்பு வைக்குமாறு அந்த மர்மப் பெண் கூறினாராம். இதனை அடுத்து தான் அணிந்திருந்த 7 பெண் சங்கிலி தங்க வளையல்கள் உட்பட 10 பவுன் நகைகளை கழட்டி சாமி படத்திற்கு முன்பு லலிதா வைத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காண்பிக்குமாறு லலிதாவிடம் கூறிவிட்டு வெளியில் வந்தார்.

கற்பூரம் ஏற்றிய பிறகு லலிதாவும் அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியில் வந்தனர்.

அப்போது அந்தப் பெண் வீட்டிற்குள் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்று சாமி படத்துக்கு முன்பிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு லலிதாவை கீழே தள்ளிவிட்டு காரில் வேகமாக தப்பித்து சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் தப்பி சென்றவரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர். ஆனால் அவர்களால் அந்த காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மப் பெண்ணை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இதேபோன்று திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தனிமையில் உள்ள வயதான பெண்கள் மற்றும் ஆண்களை குறி வைத்து திருட்டு சம்பவம் நடைபெறுகின்றது.  எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மர்மப் பெண்ணை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News