50 வருடங்களாக வசித்து வரும் 41 குடும்பங்கள் வீடுகளை இடிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்போது கதவை பூட்டி உள்ளே வீட்டுக்குள் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.;
பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 50 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிநபர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி முன்னிலையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக் கொண்டு வீடுகளை இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் போலீசாரையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மற்றொரு புறம் மின்சாரத்துறை ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வருவாய் துறையினர் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள், காவல்துறையுடன் இணைந்து உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.