செங்கம் அடுத்த சின்னப்பிஞ்சூரில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்: விவசாயி கவலை
செங்கம் அடுத்த சின்னப்பிஞ்சூரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததால் அரசு வீடு கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பிஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பிஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமக்கவுண்டர் மகன் காசி (வயது 65) விவசாயி. இவரது மனைவி ராஜாம்பாள் (வயது 60). இவர்கள் இருவரும் சுமார் 150 ஆண்டு பழனையான வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் அவர்களது ஓடு வீட்டில் மழைநீர் ஒழுகிய நிலையில் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று பெய்த கனமழையால் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ஓடுகள் சரிந்து கீழே விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயி காசி கூறுகையில், எனது வீடு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்தாக எங்கள் முன்னோர்கள் கட்டியது. இந்த வீட்டில் பல ஆண்டுகளாக என் மனைவியுடன் வசித்து வருகிறேன். கடந்த சில ஆண்டாக மழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் கசிந்து மிகவும் அவதிப்பட்டு வந்தோம். தற்போது வீடு இடிந்து விழுந்ததால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம்.
அரசு வீடு கட்டும் திட்டத்திலும் மனு அளித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த முறையாவது அரசு எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.