கூடுதல் விலைக்கு காய்கறி விற்றால் அனுமதி ரத்து: திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை

திருப்பூர் மாநகராட்சியில், காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால், உடனடியாக அனுமதி ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-01 14:34 GMT

கோப்பு படம்

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில், 60 வார்டுகள் அமைந்துள்ளன. தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் பயன்பெறும் வகையில், நான்கு மண்டலங்களிலும் 356 நான்கு சக்கர வாகனங்கள், 308 டூ வீலர்கள், 124 தள்ளுவண்டி என மொத்தம் 788 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யவும், 15 வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கும், திருப்பூர் மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வாகனங்களில் கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து,  கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்றி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  காய்கறி விற்பனை தொடர்பான தகவல்களை கலெக்டர் ஆபீஸ் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 0421–2971192 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

உழவர் சந்தையில் தினமும் நிர்ணயிக்கப்படும் விலைக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்ய,  மண்டல அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வாகனங்களில் அனுமதி ரத்து செய்யப்படும், என்றார்.

Tags:    

Similar News