திருப்பூரில் 50 போலீசாருக்கு கொரோனா: கவனமுடன் பணியாற்ற எஸ்பி அறிவுரை!
திருப்பூரில், 50 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி எஸ்பி. அறிவுரை வழங்கியுள்ளார்.;
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பேஸ் ஷீல்டு உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் வீரபாண்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் 4 போலீஸார் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள அரசு நடுநி்லைப்பள்ளியில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. அதேபோல், திருப்பூர் மத்திய போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் பள்ளியில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது.
திருப்பூரில் இதுவரை, 50 போலீஸார் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் போலீஸாரின் களப்பணிகளை பார்வையிட்ட எஸ்பி. திஷா மிட்டல், போலீஸார் தங்கள் குடும்பத்தினரை கவனத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும்; நோய் தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.