கூடுதல் கட்டணமா? தனியார் மருத்துவமனைகளுக்கு திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன், கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் தந்தை சுப்பிரமணியம்,62, க்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 21 நாட்கள் சிகிச்சை பிறகு, ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதாக கூறி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
ஆனால், 21 நாட்கள் சிகிச்சைக்கு 19 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் கட்டிய நிலையில், அதற்கான விவரங்கள் அளிக்கப்படவில்லை. எனவே,மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை, கட்டண வசூல் குறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.
இதேபோல், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு புகார்கள் வந்தன.
இந்நிலையில், திருப்பூர் கலெக்டர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 41 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதில், தீவிரமில்லாத சிகிச்சைக்கு 5 ஆயிரம் ரூபாய், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைக்கு 15 ஆயிரம் ரூபாய், வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு 35 ஆயிரம் ரூபாய், ஊடுருவா வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு 30 ஆயிரம் ரூபாய், ஆக்சிஜன் உதவியுடன் வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இல்லாதவருக்கும் இதே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசலிக்கப்படுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எச்சரித்துள்ளார்.