குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திருப்பூர் மாநகராட்சி மனசு வைக்குமா?
திருப்பூர் மாநகராட்சியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. திருப்பூர் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்ததால், விநியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை என விநியோகம் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, மாநகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும், வால்வு பகுதியில் பெரிய அளவில் கசிவு ஏற்பட்டும் குடிநீர் வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி 58 வார்டு பகுதியில், கடந்த 2, வாரத்துக்கு மேல் குடிநீர் விநியோகம் தடைபட்டிருந்தது. குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, மாநகராட்சியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஆவேசமடைந்து, தண்ணீர் விநியோகம் செய்யும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். வால்வு கசிவுகளை சரி செய்ய வேண்டும் என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் அதிகரித்து, வினியோகம் சீராக கிடைக்கும் என்றனர்.