ஊரடங்கில் விலக்கு தரலாமே! ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் கோரிக்கை
திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஏஇபிசி சார்பில் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.;
இது தொடர்பாக, திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் சக்திவேல், பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஆடை ஏற்றுமதியில் பெரும்பாலானவை பருவ காலம் மற்றும் பேஷன் உணர்திறன் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சரியான நேரத்தில் செய்யாவிட்டால் அவற்றின் காப்பு மதிப்பு பூஜ்ஜியமாகி விடும்.
உற்பத்தி அழிந்து போகும் தன்மையை கருத்தில் கொண்டு ஆடை ஏற்றுமதியை அத்தியாவசிய சேவைகளாக பார்க்க வேண்டும். பல அண்டை மற்றும் போட்டி நாடுகள் ஏற்கனவே ஆடை ஏற்றுமதிக்கு அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளன.
ஆடை ஏற்றுமதியாளர்கள் கடந்த ஆண்டு பெரும் பின்னடைவை சந்தித்தனர். மிகப்பெரிய ஏற்றுமதி ரத்து, திவால் நிலைகள் மற்றும் தொழிலாளர்கள் பூர்வீரக இடங்களுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐ ரோப்பாவில் இருந்து கிடைத்த ஏற்றுமதி ஆர்டர்களால் புத்துயிர் பெற்றன.
ஆனால், இப்போது இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் கொரோனா நெருக்கடியின் 2 வது அலை பல மாநிலங்களில் ஊடரங்கு விதித்து, வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்கு சென்றுவிடும். போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து ஆர்டர் எடுக்க ஏற்றுமதி நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நேரத்தில் வர்த்தகர்களை இழந்தால், ஆர்டர்கள் எதிர்காலத்தில் திரும்பி வராது. அனைத்து ஆடை நிறுவனங்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஆதரவு அளிப்பார்கள். எனவே ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும். முழு ஊரடங்கில் இருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நிறுவனங்கள் மீண்டும் இயங்குவதன் மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். ஆர்டர்களும் போட்டி நாடுகளுக்கு செல்லாது, என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.