கொரோனா முழு ஊரடங்கால் திருப்பூர் 'வெறிச்'!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருப்பூர் நகரம், வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை, வேகமாக பரவ துவங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை, தினமும் 300ஐ தொட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையை காட்டிலும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஏராளமான படுக்கை வசதிகளுடன் கொரோனா கவனிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து திருப்பூரில் கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்வதை கண்காணிக்கும் வகையில், மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என, ஒலிபெருக்கி மூலம் போலீஸார் எச்சரித்து வருகின்றனர். எட்டு மாதத்துக்கு பிறகு மீண்டும் அமலாகி இருக்கும் முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரம், வெறிச்சோடி காணப்படுகிறது.