ஒரு படுக்கையில் 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை - திருப்பூரில் அவலம்!

திருப்பூர் மாவட்டத்தில், ஆக்சிஜன் கருவி செயல்படுத்த பணியாளர்கள் இல்லாததால், ஒரு படுக்கையில் இரு நோயாளிகள் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.;

Update: 2021-05-29 03:39 GMT

கொரோனா 2 வது அலை திருப்பூர் மாவட்டத்தை உலுக்கி வருகிறது. தற்போது வரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 39 ஆயிரம் பேர் வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 425 பேர் இறந்து உள்ளனர். 16 ஆயிரத்து 894 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் 701 ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கை, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரில் 252 என 272 ஆக்சிஜன் கருவிகளுக்கு பணியாளர்கள இல்லாமல், செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளதால், பற்றாகுறை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒரே படுக்கையில்  2 பேர் சிகிச்சை அளிக்கும் அவலநிலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்து உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 250 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் கருவிகளை இயக்க பணியாளர்கள் இல்லாமல், கருவி செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஒரே படுக்கையில்,  2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். போதிய பணியாளர்களை நியமித்து ஆக்சிஜன் கருவியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News