திருப்பூரில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் பணி தீவிரம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
திருப்பூரில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் ர 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் சென்டரை, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருகிறது.
சில உதிரி பாகங்கள் கிடைப்பதில் தாமதம் காரணமாக, கொள்கலன் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. திருப்பூரில், குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 252 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் விஜய்கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.