விதிமீறும் தொழில் நிறுவனங்களுக்கு சீல்: திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை

திருப்பூரில் இன்று முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பணியாளர்களுடன் இயங்கினால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Update: 2021-06-07 14:02 GMT

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் 14, ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன், சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பூரில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் பனியன் கம்பெனிகள் செயல்படுகிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஊர் சென்று விட்டனர். மீதமுள்ள தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்கி உள்ளனர்.

தற்போது நிறுவனங்கள் இயங்க துவங்கி உள்ளதால், கம்பெனியில் தங்கி உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 சதவீத பணியாளர்களுக்கு மேல், கூடுதல் பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட்டால், சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள்  கூறுகையில், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கான அனுமதி இருந்தால் ஏற்றுமதிக்கான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்பவதற்காகவும் மட்டும் 10 சதவீத பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழிமுறைகளை பின்பற்றி நிறுவனங்கள் இயங்க வேண்டும். மீறினால், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News