பின்னலாடை தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்: கலையிழந்த திருப்பூர் நகரம்!
பின்னலாடை உற்பத்தியில் ஈடுபடும் வடமாநிலத்தவர் சொந்த ஊர் சென்றதால் திருப்பூர் மாவட்டம் கலையிழந்து நிற்கிறது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் தனித்தன்மையுடன் விளங்குகிறது. மேலும், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் அதிகம் உள்ளது. இத் தொழில் நகரமான திருப்பூர் மாவட்டம் முழுவதும் பீகார், ஒடிசா, அசாம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 2 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
இதில் திருப்பூர் மாநகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கல்லம்பாளையம், ராயபுரம், தென்னம்பாளையம், அனுப்பர்பாளையம், கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை வீடுகள் காலியாக உள்ளன.
பின்னலாடை மற்றும் விசைத்தறியாளர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. இதில், பத்து லட்சம் பேர் நேரடியாக, பத்து லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.
எப்போதும் ஏப்ரல் முதல் ஜூலை வரை அனைத்து ரகங்களும் டிமாண்ட் இருக்கும். தீபாவளியை திட்டமிட்டு, துணி ரகங்களை அதிகமாக கொள்முதல் செய்வார்கள். உற்பத்தியாகும் அனைத்து ரகங்களும், வடமாநிலங்களுக்கு அனுப்பி டையிங், பிராசசிங், கார்மண்ட்ஸ் பணி செய்து வர வேண்டி உள்ளது.
தற்போது வட மாநிலத்துக்கு துணிகளை அனுப்பவில்லை. ஏற்கனவே அனுப்பிய ரகங்களுக்கு, பணம் கிடைக்குமா? என்ற அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊருக்கு சென்று விட்டனர். கொரோனா பரவல் குறைந்த பிறகே அவர்கள் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,என்றனர்.