ஐயோ, ஆம்புலன்ஸ்ல புருஷன புடிச்சுட்டு போயிடாதீங்க: கதறிய மனைவி - கணக்கெடுப்பில் காமெடி!

திருப்பூரில், வீடுவீடாக நடைபெறும் கொரோனா கணக்கெடுப்பின் போது, என் கணவரை ஆம்புலன்ஸ் அனுப்பி பிடிச்சுட்டு போயிடாதீங்க என்று, மனைவி பயந்து போன சுவாரஸ்யம் நடந்துள்ளது.

Update: 2021-06-02 13:45 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது வீடுவீடாக விவரம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் வீடுவீடாக கொரோனா நோய் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வாரியாக, 100 வீடுகளுக்கு ஒருவர் வீதம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, இப்பணி நடைபெற்று வருகிறது. வீட்டு கதவு எண், பெயர், காய்ச்சல், சளி, மூச்சு திணறல், உடல்வலி, இருமல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இப்பணியின்போது, ஒருசில இடங்களில் சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கணக்கெடுப்பாளர்களை கண்டால் வீட்டில் உள்ளவர்கள் ஒருவித பதற்றமடைவது; லேசான காய்ச்சல் இருந்தாலும், தங்களுக்கு ஒன்றும் இல்லாதது போல் காட்டிக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.

திருப்பூரிலும் இதுபோன்ற ஒரு காமெடி சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட எல்லையில், அங்கன்வாடி ஊழியர் ஒருவர், கணக்கெடுப்புக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த வீட்டின் குடும்ப தலைவி, வீ்ட்டின் விவரங்களை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வந்துள்ளார்.  வீட்டில் காய்ச்சல், சளி யாருக்கேனும் உள்ளதா என்று கேட்டபோது, தனது கணவருக்கு சளி தொல்லை இருப்பதாகக் கூறியுள்ளார்.

உடனடியாக, அந்த விவரத்தை அங்கன்வாடி ஊழியர் பதிவு செய்து கொண்டு சென்று விட்டார். அவர் சென்ற அடுத்த நிமிடமே, கணவர் கோபத்தில் கொப்பளித்தார். சளி என்று  சொன்னதற்காக, கணவன் -  மனைவிக்கு இடையே லடாய் தொடங்கியுள்ளது. " எனக்கு காய்ச்சல், சளி என்று நீ ஏன் சொன்ன?" என்று கேட்டு, மனைவியை கணவர் அதட்டியுள்ளார்.

அத்துடன், "சீக்கிரம் ஆம்புலன்ஸ் வரும். ஐயோ, என்னை ஆஸ்பத்திரிக்கு பிடித்துக்கொண்டு போய் விடுவாங்க. என்ன நடக்கப் போகுதோ" என்று சொல்லிய அவருக்கு, பீபி எகிறியது. கோபத்தில், தனக்கு காய்ச்சல் என்று சொல்லிய மனைவி துரத்தி துரத்தி நையப் புடைக்க ஆரம்பித்தார்.

இதனால் பதறிப்போன அந்த பெண்ணோ, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர், பக்கத்து தெருவில் விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்த அதே அங்கன்வாடி ஊழியரிடம் போனார். அவரிடம் "சார், எனது கணவருக்கு வெறும் சளிதான்; தயவு செய்து வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி, எனது கணவரை பிடித்துக்கொண்டு போய்விடாதீர்கள் சார்" என்று கெஞ்சியுள்ளார்.

அதற்கு அந்த அங்கன்வாடி ஊழியரோ, "அம்மா, தயவு செய்து பயப்படாதீர்கள் இது கணக்கெடுப்பு மட்டும்தான். இதனால், வேறு எந்த தொந்தரவோ, வீட்டை சுற்றி தகரம், தட்டி அடிப்பதோ, ஆம்புலன்ஸ் வரவோ செய்யாது" என்று தைரியம் சொல்லி, அவரை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே, அந்த பெண்மணி நிம்மதியுடன் வீடு திரும்பினார். 

எனவே, அரசு மேற்கொண்டு வரும் கொரோனா குறித்த வீடுவீடான கணக்கெடுப்பில், நீங்களும் எந்த பயமோ, தயக்கமோ இல்லாமல், ஒளிவு மறைவு இல்லாமல், உண்மையை சொல்லுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில், அரசுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, சீக்கிரம் நாமெல்லாம் இயல்புநிலைக்கு திரும்ப முடியும். என்ன செய்வீர்கள் தானே?

Tags:    

Similar News