பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள்; வெறிச்சோடிய திருப்பூர்
Tirupur News- பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக, திருப்பூரில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடியது.
Tirupur News,Tirupur News Today- பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை. தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி இருந்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பின்னலாடை நிறுவனங்களுக்கு கடந்த 13-ம் தேதி முதல் 17-ம்தேதி (இன்று) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் பிரதான சாலைகளான திருப்பூர் குமரன் சாலை, பல்லடம் ரோடு, காதர் பேட்டை, அரிசி கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள கொங்கு மெயின் ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர்போன காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியானது வெறிச்சோடி காணப்படுகிறது. விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வார இறுதிநாளான 21-ம்தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள். அதன்பிறகே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் மட்டுமே இப்படி சொந்த ஊர்களுக்கு செல்வதை பெரும்பாலான தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால், இந்த நாட்களில் மட்டுமே, திருப்பூரை மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத, ஒரு சராசரி நகரமாக காண முடிகிறது. மற்ற நாட்களில் அதிகாலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கூட்டமும், வாகனங்கள் நெருக்கடியும் மிகுந்த ஒரு பரபரப்பான நகரமாகவே காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.