திருப்பூரில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
திருப்பூரில் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; நடப்பாண்டில் இதுவரை, குண்டர் சட்டத்தில், 61 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
திருப்பூரில் நடப்பாண்டில் இதுவரை குண்டர் சட்டத்தில், 61 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அவிநாசி ரோடு ராயப்பண்டாரம் வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன உரிமையாளர். இவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 12 ம் தேதி வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மருகால் குறிச்சியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், வானுமாமலை, நல்ல கண்ணு, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இசக்கி பாண்டி மீது கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை, திருட்டு வழக்கு உட்பட 11 வழக்குகள் உள்ளது. ரமேஷ் மீது ஒரு கூட்டு கொள்ளை வழக்கு உள்ளது.
எனவே, இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் உள்ள இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.