மூதாட்டிக்கு சிகிச்சை; போலீஸ் உதவி கமிஷனர் காட்டிய கருணை

திருப்பூரில் ஆதரவற்ற மூதாட்டிக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க, போலீஸ் உதவி கமிஷனர் உதவியது, பலரது பாராட்டை பெற்றது.

Update: 2022-09-11 05:06 GMT

கடமை நிறைந்த ‘காக்கிச்சட்டை’க்குள், கசிந்தது கருணை; திருப்பூர் குமரன் ரோட்டில் தவித்த மூதாட்டியை, மருத்துவமனையில் சேர்த்த, போலீஸ் உதவி கமிஷனர்.  

திருப்பூரில் குமரன் ரோடு, பரபரப்பான வாகன நெரிசல் உள்ள பகுதி; நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், 75 வயது மூதாட்டி ஒருவர், நடக்க முடியாமல்,  குமரன் ரோட்டிலேயே  உட்கார்ந்திருந்தார். ரோட்டை நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த வழியாக, திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். ரோட்டுக்கு நடுவில் உட்கார்ந்திருந்த அந்த மூதாட்டியை பார்த்ததும், உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார்.

ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக மூதாட்டி அவரிடம் தெரிவித்தார். குளிரால் நடுங்கிய மூதாட்டிக்கு, உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். கிழிந்த ஆடையுடன் இருந்த மூதாட்டிக்கு, புதிய ஆடையை தந்து அணிய வைத்து, சால்வையால் உடலை போர்த்தி பாதுகாத்தார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ்சில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன், உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரிக்கிறார்கள்.

ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் கவனிக்காத நிலையில், போலீஸ் அதிகாரியின் இந்த கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Similar News