திருப்பூரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை
Tirupur News- திருப்பூரில் நேற்றிரவு முழுவதும் விடியவிடிய பல இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் ஏற்பட்டது.
Tirupur News,Tirupur News Today-தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருப்பூர் மாநகர் பகுதியில் லேசான தூரலுடன் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் இன்று காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 167 மி.மீ., மழை பெய்துள்ளது. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 60 மி.மீ., திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 52 மி.மீ., கலெக்டர் அலுவலகம் பகுதியில் 37 மி.மீ., அவிநாசியில் 141 மி.மீ., ஊத்துக்குளியில் 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெருப்பெரிச்சல் பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் அதிகாலையிலேயே அங்கு சென்ற வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியிருந்த மழை நீரை துரிதமாக அப்புறப்படுத்தினர்.
இதேபோல் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு காந்திநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் வாளிகள் மூலம் இறைத்து வெளியேற்றினர்.
திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொது மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அங்கு குடியிருப்பு பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கி உள்ளனர். திருப்பூர் காந்திநகர் பகுதியில் வீட்டில் சிக்கிய மூதாட்டி ஒருவரை வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர்.
15வேலம்பாளையம் பகுதியில் பெரியமரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்துள்ளது. மேலும் சகதிக்காடாக மாறியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பூர் காட்டன் மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் இன்று காலை முதலே மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்பணிகளை மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டனர்.
மேலும் அங்கு சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் டி.எம்.எப். மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பல்லடம் பகுதியில் 15 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 537 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாநகர் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பெய்துள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இன்று காலை மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஊத்துக்குளி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெள்ளியம்பாளையத்திற்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டனர். சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் குடிசை பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் மழைநீரை வெளியேற்றி கொண்டிருந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, நீரோடையை சரி செய்தனர். மேலும் சிவசக்தி நகரில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பி, குளம் போல் காட்சி அளித்தது.
இதேபோல் ஊத்துக்குளி சாலையில் இருந்து விஜயமங்கலம், பெருந்துறை வரை ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பி வழிந்தது. மேலும் செங்கப்பள்ளி மற்றும் பெருமாநல்லூர், தொரவலூர் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பின. செங்கப்பள்ளி, பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதில் மிகவும் திணறினர். விடிய விடிய மழை கொட்டித்தீர்த்ததால் ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், பெருந்துறை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.