குடிநீா் இணைப்பு வழங்க திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் வலியுறுத்தல்
Tirupur News- திருப்பூா் செல்லாண்டியம்மன் துறை பகுதிக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் செல்லாண்டியம்மன் துறையில் வசிப்போருக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,
திருப்பூா் மாநகராட்சி 45-வது வாா்டுக்குள்பட்ட செல்லாண்டியம்மன் துறை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 1996-ம் ஆண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இது மூன்று தளங்களுடன் 240 குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடி பகுதியாகும். வருவாய்த் துறை ஆவணங்களின்படி இந்த நிலம் அரசு புறம்போக்கு செல்லாண்டியம்மன் கோயில் என வகைப்பாட்டில் உள்ளது.
நில உரிமை மாற்றம் தொடா்பாக சென்னை நில நிா்வாக ஆணையரால் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி வழங்கப்படாததால் 240 குடும்பங்களுக்கும் கிரையப் பத்திரம் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்தக் குடும்பங்களில் தற்போது 1,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கும் நிலையில் குடிநீா் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. குடிநீா் இணைப்புப் பெற வாரியத்தின் மூலம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகையை மாநகராட்சி நிா்வாகம் செலுத்தவும் தயாராக உள்ளது.
மேலும், சொத்து வரி, குடிநீா் வரி ஆகியவற்றை செலுத்துவதற்கு வசதியாக பயனாளிகளின் பெயரில் வரிவிதிப்பு செய்வதற்கான பட்டியல் மாநரகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, செல்லாண்டியம்மன் துறையில் வசிப்போருக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.