வரி நிலுவை அறிக்கைகளை ரத்து செய்ய, திருப்பூர் ‘சைமா’ சங்கம், அமைச்சரிடம் கோரிக்கை
Tirupur News,Tirupur News Today- வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என, திருப்பூர் ‘சைமா’ சங்கம் சார்பில், அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு வணிகத்துறை சார்பில், அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினார்.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது,
தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட்டுமாறு அறிக்கை அனுப்பப்படுகிறது.
வாட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும்போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட்பது நியாயமான ஒன்றல்ல. மேலும் வணிக வரித்துறை உத்தரவின்படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வியாபார பரிவர்த்தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம்பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங்களில் இருந்து மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், பனியன் தொழிலில் வெளிமாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப்பித்து 1 சதவீத வரி செலுத்தும் உத்தரவு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003-ம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குகளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.