நூல் விலை குறையுமா? - அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பனியன் உற்பத்தியாளர்கள்
Tirupur News. Tirupur News Today-திருப்பூரில் கடந்த 3 மாதங்களாக நூல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடையே காணப்படுகிறது.
Tirupur News. Tirupur News Today - திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதுபோல் ஏப்ரல் மாதத்திலும், கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளன. கடந்த 3 மாதங்களாக அதிகரிக்காமல், ஒரே நிலையில் நூல் விலை இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும் மே மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளன. இதனால் நூல் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் தொழில்துறையினர் உள்ளனர்.
மீண்டுவரும் தொழில் துறை
கடந்தாண்டில் ஏற்பட்ட நூல்விலை உயர்வால், பனியன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆர்டர்களும் வெகுவாக குறைந்துபோனதால், பல பனியன் நிறுவனங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டன. தீபாவளிக்கு சில மாதங்களுக்கு முன்பே, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டனர். தீபாவளிக்கு பிறகும், சில மாதங்களாக பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பழைய நிலைக்கு திரும்பாமல், அதே மந்த நிலை நீடித்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய தொழில் நிறுவனங்களில் கூட 30 சதவீத உற்பத்தியே இருந்தது. அந்தளவுக்கு தொழில் உற்பத்தி சூழல் மாறிப்போனது. இதனால், தொழில்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா, என்பதே தொழில்துறையினருக்கு பலத்த கவலையை தந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நூல்விலை ஒரே நிலையில் இருப்பதும், விலை மாறாமல் தொடர்வதும் தொழில்துறையினருக்கு சாதகமாக மாறியுள்ளது. இன்னும் நூல்விலை குறையும் பட்சத்தில், அதிக ஆர்டர்கள் கிடைக்கவும், உற்பத்தி அதிகரிக்கவும் பனியன் தொழில் துறை மீண்டும், பழைய வேகத்துக்கு திரும்பவும் உதவியாக அமையும். அதனால், நூல்விலை குறித்த அறிவிப்புக்காக, பனியன் தொழில்துறையினர் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.