திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆவணங்கள் இல்லாத பனியன் பண்டல்கள் பறிமுதல்
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆவணங்கள் இல்லாத பனியன் பண்டல்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் இருந்து தினந்தோறும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளுக்கு அதிகளவில் பின்னலாடைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரிலிருந்து வெளி மாநிலங்களுக்கு தினந்தோறும் பல்லாயிரம் கிலோ மதிப்பிலான பின்னலாடைகள் அனுப்பபட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் பல ரயில்கள் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லாததால், பார்சல் சேவைகளை திருப்பூரில் இருந்து அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் திருப்பூரிலிருந்து நமது நாட்டின் பல பகுதிகளுக்கும் பனியன் மற்றும் அதுசார்ந்த உற்பத்தி பொருட்களை ரயிலில் அனுப்பி வந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். பார்சலுக்கு அதிக செலவு செய்து தனியார் போக்குவரத்தில் அனுப்பியதால் சரக்குகளுக்கான விலை நிர்ணையிப்பதிலும், அவற்றை விற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
பின்னலாடை உற்பத்தியாளர்கள் சார்பில், திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு அலுவலகத்திலிருந்து, பனியன் தொழில் சார் உற்பத்தி பொருட்களை புக்கிங் செய்து அனுப்பவும், அதற்காக ரயில்களை நின்று செல்லவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து, சரக்கு முன்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் மூலம் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் சரக்குகளை அனுப்பி வருகின்றனர்.
திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் உள்ளிட்ட உள்நாட்டு ஆடை வகைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அனுப்பப்படும் ஆடை பண்டல்கள் பெரும்பாலும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் ஆடைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பார்சல் பிரிவில் வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பில் உள்பட முறையான ஆவணங்கள் இன்றி ஒருசில மாநிலங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த 50 பனியன் மற்றும் ஆடை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.