மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் திருட்டு; வடமாநில வாலிபர் கைது

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் மாகாளியம்மன் கோவிலில் தாலி, வெள்ளிக்கிரீடம் ஆகியவற்றை, திருடிச்சென்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-08 01:53 GMT

Tirupur News. Tirupur News Today-திருட்டு நடந்த, மாகாளியம்மன் கோவில் முகப்புத்தோற்றம்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் செவந்தாம்பாளையம், தெற்கு தாலூகா அலுவலகம் செல்லும் வழியில், மாகாளியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜை செய்து விட்டு, கோவிலை பூசாரி பூட்டி சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை வழக்கம் போல் கோவில் பூசாரி கோவிலை திறந்து பூஜை செய்ய, உள்ளே சென்றார். அப்போது பூஜை பொருட்கள் வைக்கும் அறையின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தாலி, சங்கிலி என 7.5 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது. மர்ம நபர் கோவிலுக்குள் புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், நல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து கோவில் வளாகத்திற்குள் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் சில்லறை காசுகளை எண்ணிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாகாளியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர், அவர்தான் என்பது போலீசாருக்கு உறுதியானது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரோணி (வயது 20) என தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் செவந்தாம்பாளையம் தாலூகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ஜீவா நகரில் வசித்து வந்ததும், கோவிலில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை தலையணைக்குள் மறைத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரோணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 வெள்ளி கிரீடம், 1 தாலி, 3 செயின், தாலியில் கோர்க்கும் காசு, வெள்ளி செயின் 2, என 7.5 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவிலில் நகைகள், பொருட்கள் திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News