தமிழக அரசின் மானியக்கோரிக்கை அறிவிப்புகள்; திருப்பூர் பனியன் தொழில்துறை மகிழ்ச்சி
Tirupur News. Tirupur News Today- கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, 22 வகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால், திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tirupur News. Tirupur News Today- கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில், துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும். சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும்.
இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும். கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது,
புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.