ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு; திருப்பூர் போலீசார் நடவடிக்கை

tirupur News, tirupur News today- திருப்பூரில் நெரிசலான பகுதிகளில், ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2023-03-27 08:58 GMT

tirupur News, tirupur News today- திருப்பூர் மாநகர பகுதியில், ட்ரோன் கேமரா மூலம், நகரை கண்காணிக்கும் போலீசார்.

tirupur News, tirupur News today- திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன்,  ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

குறிப்பாக இந்த ட்ரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக தொழில் நகரங்களில், திருப்பூர் முக்கியமானதாக விளங்குகிறது. திருப்பூரில், தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, வடமாநில தொழிலாளர்களும் திருப்பூருக்கு வந்து விட்டதால், அவர்களது எண்ணிக்கையும், நகரில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

பிற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க, மக்கள் பெருக்கமும், வாகன நெரிசலும் மிகுந்த திருப்பூரில் வந்து பதுங்கிக்கொள்கின்றனர். பல  வேளைகளில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும், திருப்பூருக்கு வந்து பதுங்கிய குற்றவாளிகளை பிடித்துச் செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

எனவே, குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த ட்ரோன் கேமரா கண்காணிப்பு பல விதங்களில் உதவும் என, திருப்பூர் மாநகர போலீசார் கூறினர்.

Tags:    

Similar News