திருப்பூரில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் போயம்பாளையம் அருகே சுகாதார பாதிப்பை ஏற்படுத்தியதால், கோழி இறைச்சிக்கடை முன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டு பி.என்.ரோடு மும்மூர்த்திநகரில் கோழி இறைச்சி கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் தினமும் அதிக அளவில் கோழிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோழிகளை சுத்தம் செய்யும் கழிவுநீர் கடையின் பின்புறம் உள்ள பழனிச்சாமி நகர் சாக்கடையில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது.
மேலும். கடுமையான துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் இறைச்சி கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கடை ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காமல், தொடர்ந்து கழிவுநீரை சாக்கடை கால்வாயில் கலந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மீண்டும் சம்பந்தப்பட்ட கோழி இறைச்சிக் கடை ஊழியர்களிடம் பேசி உள்ளனர். ஆனால் நேற்றும் அந்த கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கவுன்சிலர் தலைமையில் பி.என்.ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்ேபாது இறைச்சி கடை தரப்பில் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் கலக்காது என்று உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னரே பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.