திருப்பூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக் ‘சீல்’ வைத்த மருத்துவத்துறை; பெண் டாக்டரிடம் விசாரணை
tirupur News, tirupur News today- திருப்பூர் அருகே மங்கலத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட கிளினிக்கை, பூட்டி மருத்துவத்துறையினர் 'சீல்' வைத்தனர்.;
tirupur News, tirupur News today- மங்கலத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட கிளினிக் (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- திருப்பூரை அடுத்த மங்கலம் நால்ரோடு பகுதியில் உரிய அனுமதியின்றி கிளீனிக் செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. அவர் இது குறித்து விசாரிக்க மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான குழுவினர் மங்கலம் நால் ரோடு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பதும், கடந்த 2 மாதமாக மங்கலத்தில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. அவரது சான்றிதழ்களை பெற்று விசாரணையை தொடங்கினார்கள். இதில் அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து, அதன்பிறகு இந்திய மருத்துவ கழகத்தின் தகுதி தேர்வு எழுதாமல் சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அந்த கிளினிக்கை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இது குறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, 'மங்கலத்தில் ஏற்கனவே வேறு ஒரு டாக்டர் இந்த கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு அவர் சென்று விட்டார். கடந்த 2 மாதமாக பிரியங்கா, இங்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்திய மருத்துவ கழக தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இந்தியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிரியங்கா தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார். அவ்வாறு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று எச்சரித்து கிளினிக் மூடப்பட்டுள்ளது. பிரியங்காவிடம் விசாரணை நடத்தி அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.