சமையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் பெயிண்டரை குத்திக்கொலை செய்த சமையல் தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பு அளித்தது.
Tirupur News. Tirupur News Today- அரியலூர் மாவட்டம் அரிச்சனாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் திருப்பூரில் பெயிண்டராக வேலை செய்து ரோட்டோரம் தங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 21-2-2022 அன்று இரவு ஸ்ரீதர் தனது நண்பருடன் திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (49) என்பவர், ஸ்ரீதரை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.
சமையல் தொழிலாளியான செந்தில்குமார் திருப்பூரில் ரோட்டோரம் தங்கி வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காட்டன் மார்க்கெட் வளாகத்தில் ஒரே இடத்தில் படுத்து தூங்கும்போது ஸ்ரீதருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே, படுப்பதற்கு இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில் கோபமடைந்த செந்தில்குமார், கத்தியால் ஸ்ரீதரை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தொழிலாளியை கொலை செய்த குற்றத்துக்கு செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். சமையல் தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.