ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம்; திருப்பூர் மாநகராட்சிக்கு தானம் வழங்கிய குடும்பம்
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம், மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டது.
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினரை, மக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கம் மற்றும் நொய்யல் ஆற்றையொட்டி சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடராஜ் தியேட்டர் ரோடு முதல் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோவில் வரை நொய்யல் ஆற்றின் தென்பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தனியார் நிலம் வழியாக செல்கிறது. தனியார் நில உரிமையாளர்களிடம் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால், சொந்த நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைத்தனர். அதன்படி நடராஜ் தியேட்டர் உரிமையாளரான நடராஜின் மகன் துரைராஜின் மனைவி மித்ரா தனது மகனுடன் சேர்ந்து 20 சென்ட் நிலத்தை மாநகர போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தவும் தானமாக அளிக்க முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மித்ரா மற்றும் அவருடைய மகன் பிரித்விராஜ் ஆகியோர் சேர்ந்து 20 சென்ட் அளவுள்ள நிலத்துக்கான ஆவணங்களை மாநகராட்சிக்கு தானமாக மேயர் தினேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். நிலத்தை தானமாக வழங்கிய மித்ரா குடும்பத்தினரை சால்வை அணிவித்து மேயர் கவுரவித்தார். நிலத்தை தானமாக வழங்கிய நடராஜன் குடும்பத்தினர் மாநகரின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரின் முக்கிய இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருப்பூர் டவுன்ஹால், சிக்கண்ணா அரசு கல்லூரி, நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, சின்னசாமியம்மாள் பள்ளி, எல்ஆர்ஜி கல்லூரி, கேஎஸ்சி அரசு பள்ளி போன்றவை இதுபோன்ற தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்களால் தானமாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மக்களின் நன்மைக்காக, தானமாக வழங்கப்பட்ட இந்த இடங்களின் இன்றைய மதிப்பு, பல நூறு கோடி ரூபாய்களை தாண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது.