திருப்பூரில் போதை மாத்திரை விற்பனை; 2 பேர் கைது
Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் போதை மாத்திரைகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகர பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் குறித்து, திருப்பூர் மாநகர போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் குமரானந்தபுரம் எல்.ஜி. மைதானத்தில் வாலிபர்கள் 2 பேர் மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் நிற்பதாக, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவர்கள் திருப்பூர் குமரானந்தபுரத்தை அடுத்த மருதாச்சலபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 20), கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (20) என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த 2 பேரும் திருப்பூர் மருந்து கடைகளில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஒரு சில மாத்திரைகளை கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பஸ் மூலமாக வரவழைத்து, பின்னர் அதை இளைஞர்கள் போதை ஏற்றுவதற்காக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அந்த மாத்திரைகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளாகும். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 40 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மருந்தகங்களில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட இதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதை மாத்திரை விற்பனை; அலட்சியம் கூடாது
இன்றைய இளைய தலைமுறை போதை கலாசாரத்தால் சீரழிந்து வருகிறது. பள்ளி சீருடையில், மாணவ மாணவியர் மதுபானம் குடிப்பது போன்ற வீடியோக்கள், சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த சூழலில், போதை மாத்திரை விற்பனை அதிகரித்தால், இளம்வயதினர் விரைவில் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி விடும். தவிர, போதை மாத்திரை என்பது மதுபானம் போன்ற நாற்றத்தை வெளிப்படுத்தாது என்பதால், போதை மாத்திரை உட்கொண்டவரை எளிதில் கண்டறிய முடியாது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் இப்போது புகை பிடிக்கின்றனர். சிலர், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். மதுபானம் குடிக்கின்றனர். இன்னும் சிலர், போதை தரும் புகையிலை சார்ந்த குட்கா பொருட்களை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழலில், போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையானால், நாளடைவில் அவர்களை நல்வழிப்படுத்துவது மிக சிரமம். மேலும், உடல் ரீதியாகவும் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதற்கு என போலீசார் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தி, போதை மாத்திரை விற்பைதை ஒழிப்பது மிகவும் முக்கியம் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.