திருப்பூரில் ரூ.40 லட்சம் கேட்டு, தொழிலதிபர் காரில் கடத்தல்; 5 பேர் கைது

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-18 17:19 GMT

Tirupur News. Tirupur News Today- தொழிலதிபரை கடத்திய கும்பல், திருப்பூரில் கைது (மாதிரி படம்)

Tirupur News. Tirupur News Today - திருப்பூரில் ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்தியது தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 35). தொழிலதிபர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த பம்பாநகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், நெருப்பெரிச்சலை அடுத்த தோட்டத்துப்பாளையம் பகுதியில் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அம்மன்நகர் பகுதியில் உள்ளது. ஆனால், அந்த வீடு வங்கிக்கடனில் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த வீட்டை கடந்த 2020-ம் ஆண்டு போயம்பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் குருசாமி (60) என்பவரிடம் ரூ.50 லட்சத்திற்கு விற்க ராஜூ முடிவு செய்தார். இதற்காக அவர் குருசாமியிடம் இருந்து, ரூ.18 லட்சத்தை முன்பணமாக பெற்றுள்ளார்.

மேலும், அந்த வீட்டிற்கான வங்கிக் கடனையும் குருசாமியே செலுத்துமாறு ராஜூ கூறி உள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தி வந்த குருசாமி அந்த வீட்டில் ஒரு குடும்பத்தை போக்கியத்திற்கு வைத்துள்ளார்.

இந்தநிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டிற்கான முழுத் தொகையையும் குருசாமி கொடுக்காததால் அந்த வீட்டின் உரிமையாளர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் குருசாமிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து குருசாமி வீட்டின் உரிமையாளர் ராஜூ தான் கொடுத்த ரூ.18 லட்சம், வங்கிக்கு செலுத்திய ரூ.10 லட்சம் என ரூ.28 லட்சத்துடன் ரூ.12 லட்சம் கூடுதலாக சேர்த்து ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வீட்டின் உரிமையாளர் ராஜூ தோட்டத்துப்பாளையத்தில் உள்ள வேஸ்ட் குடோனில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென ராஜூவை காரில் கடத்தி சென்று மிரட்டியுள்ளது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜூவின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100-க்கு அழைத்துள்ளார். இதன் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

காரில் கடத்தப்பட்ட ராஜூவை அந்த கும்பல் நல்லாத்துப்பாளையம் அருகே இறக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ராஜூவை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவரை கடத்தியது குருசாமி என்பதும், அவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அண்ணாநகரை சேர்ந்த முருகேசன் (42), எம்.எஸ்.நகரை சேர்ந்த சுந்தரேசன் (36) மற்றும் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த நாகராஜ், கோவிந்தன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் சிக்னலை கண்காணித்தனர்.

இந்நிலையில் குருசாமி, சுந்தரேசன் ஆகியோரை ராதாநகரில் வைத்தும், முருகேசனை பூண்டி ரிங்ரோட்டில் வைத்தும், நாகராஜ், கோவிந்தன் ஆகியோரை கொங்கு மெயின் ரோட்டில் வைத்தும் போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் வீடு விற்றது தொடர்பாக ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News