திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் புதிய நிர்வாக அலுவலகம்; காணொலியில் திறந்த முதல்வர் ஸ்டாலின்
Tirupur News- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் டிசம்பர் -2018 அன்று முதல் ஈரோடு ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை விவகார எல்லையாக கொண்டு சுமார் 430 சங்கங்களிலிருந்து 14,121 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் பால்குளிர்விப்பு நிலையங்கள் 2 மற்றும் தொகுப்பு பால் குளிரகங்கள் 35 மூலம் நாளொன்றுக்கு 1,38,000 லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு ஈரோடு, கோவை மற்றும் இதர ஒன்றியங்களுக்கும், இணையத்திற்கும் அனுப்பப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் சேகரிப்பு பணியில் 50 எண்ணிக்கை பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 40,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஒன்றியத்தில் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டுத்தொகை பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்து வருகிறது.
ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக 8 எண்ணிக்கை பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது, பால் உற்பத்தியாளர்களுக்கு 10 தினங்களுக்கு ஒருமுறை நிலுவையில்லாமல் பணம் வழங்கப்பட்டு வருகிறது. 55 எண்ணிக்கை பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி, வீரபாண்டி பிரிவில் பால்குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிநிதி உதவியுடன் ரூ.3,00,57,047 மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.