டெல்லியில் பாரத் டெக்ஸ் கண்காட்சி; திருப்பூர் சார்பில் 100 அரங்குகள் அமைக்க திட்டம்

Tirupur News- டெல்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் பாரத் டெக்ஸ் கண்காட்சியில் திருப்பூர் தொழில்துறையினர் தரப்பில் 100 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-11-19 12:13 GMT

Tirupur News- டெல்லியில் நடக்கும் பாரத் டெக்ஸ் கண்காட்சியில், திருப்பூர் தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- இந்திய அளவில் ஜவுளித்துறையின் தொழில்நுட்பங்களை உலக அளவில் உள்ள வர்த்தகர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வர்த்தக விரிவாக்கத்துக்காகவும் பாரத் டெக்ஸ் என்ற தலைப்பில் உலக அளவிலான ஜவுளித்துறை கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் இருந்து ஜவுளித்துறை தொடர்பான தொழில் நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரம் தொழில்முனைவோர் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக ஜவுளித்துறை சார்பில் இதற்காக ஜவுளி தொழில்துறையினர் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள ஓட்டலில் நடந்தது. தமிழக ஜவுளித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்றார். மத்திய ஜவுளித்துறை இணை செயலாளர் ராஜீவ் சக்சேனா பங்கேற்று பாரத் டெக்ஸ் ஜவுளித்துறை கண்காட்சி குறித்து விளக்கினார்.

கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், இளங்கோ, ஆனந்த், செந்தில்குமார், ரத்தினசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது,

பாரத் டெக்ஸ் ஜவுளித்துறை கண்காட்சி முதன்முறையாக மத்திய அரசு சார்பில் டெல்லியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஜவுளித்துறை தொடர்பான தொழில்துறையினர் கண்காட்சியில் அரங்குகளை அமைக்கின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்க இருக்கிறோம்.

இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பையர்கள் பார்வையிட இருக்கின்றனர். இதன் மூலமாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஆடைகளை காட்சிப்படுத்தும்போது அவற்றை பையர்கள் பார்வையிட்டு திருப்பூரின் வளம்குன்றா உற்பத்தி உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறும்போது ஆர்டர்களை பெற வசதியாகும். திருப்பூருக்கான பிராண்ட் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று நாம் கண்காட்சியில் அரங்குகளை அமைத்து பையர்களை சந்திப்பதை விட, ஒரே இடத்தில் பையர்கள் வந்து பார்வையிட வசதியாக அமையும்.

பாரத் டெக்ஸ் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சி ஜவுளித்துறை வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பெரிய வாய்ப்பாக அமையும். நூல், காடா துணி உற்பத்தி ஒரே இடத்தில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News