திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் பதவி
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் பதவி பணியிடத்தை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர்ஈ.பி.அ.சரவ ணன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.பெ.சாமிநாதனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட துறையான தமிழ் வளர்ச்சித்துறை பல மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளாக துணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை. தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாதத்துக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே திருப்பூர் வந்து செல்கிறார்.
எனவே திருப்பூர் மாவ ட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பணியிடத்தை விரைவாக நிரப்ப தீர்வு கண்டு தமிழ் மொழி மென்மேலும் வளர்ந்து சிறக்க தாங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தி.மு.க அரசு தமிழ் மாெழி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வேலை என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் பதவி காலியாக வேதனையை தரும் வகையில் இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.