போகர் மீள் வருகை சிவன்மலை ஆண்டவர் உத்தரவு

சிவன்மலையில் அமைந்துள்ள சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் போகர் சித்தரின் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது

Update: 2022-04-03 06:34 GMT

சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் போகர் சித்தரின் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவு.

சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் போகர் சித்தரின் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது. இதன் மூலம் உலகத்தில் என்னமாதிரியான மாற்றம் ஏற்படப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும்.

இந்த தலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.

வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு உத்தரவுப் பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது. இதுவரை நூற்றுக்கணக்கான பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கடலூரை சேர்ந்த கபில்தேவ்,45 என்ற பக்தரின் கனவில் உத்தரவான, சித்தர்களில் முக்கியமானவரும், பழனி முருகன் நவபாசன சிலையை செய்தவருமான போகர் சித்தரின் படம் வைத்து பூசை செய்யப்பட்டு வருகிறது.சித்தர்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், தமிழ்க் கடவுள் முருகன் சிலையை செய்தவருமான போகரின் படம் உத்திரவாகி உள்ளதால், உலகில் மீண்டும் சித்தர்கள் ஆட்சி மலரும் என பக்தர்கள் கூறினர்.

உத்தரவுப் பெட்டியில் இதற்கு முன்பாக இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு‌மாதத்தில் மட்டும் பருத்தியின் விலையும், நூல் விலையும் அதிகமாக உயர்ந்தது. நேற்றைய தினம் நூல் விலை ரூ.420 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News