திருப்பூரில் ரூ. 4.05 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட அறிவியல் பூங்கா பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு
Tirupur News- திருப்பூர் அருகே சின்னக்காளிபாளையத்தில் ரூ. 4.05 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட மாநகராட்சி அறிவியல் பூங்கா பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகராட்சி சாா்பில் சின்னக்காளிபாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா பொதுமக்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அா்ப்பணிக்கப்பட்டது.
திருப்பூா் சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தில் தனியாா் மற்றும் அரசு பங்களிப்பில் ரூ.4.05 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவை உருவாக்க ராயல் கிளாசிக் குழுமத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.3 கோடியும், சென்னை சில்க்ஸ் குழுமத்தின் டீமேஜ் பில்டா்ஸ் சாா்பில் ரூ.25 லட்சமும், மீதமுள்ள ரூ.80 லட்சம் தமிழக அரசின் நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.
இதைத்தொடந்து, இந்தப் பூங்காவை தமிழக முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அண்மையில் திறந்து வைத்தாா். இதையடுத்து, இந்தப் பூங்காவை பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கும் விழா, வனத்துக்குள் திருப்பூா் 9- ம் ஆண்டு நிறைவு விழா அறிவியல் பூங்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், ராயல் கிளாசிக் குழுமத்தின் தலைவா் கோபாலகிருஷ்ணன், டீமேஜ் பில்டா்ஸ் தலைவா் கே.நந்தகோபால், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.